பெட்ரோல் விலைய எத்தனை வாட்டி ஏத்தினாலும் பரவால்ல, எவ்வளவு ஏத்தினாலும் பரவால்ல, சொந்த வண்டி வாங்கிறனும்னு தீர்மானம் பண்ணி.. நாப்பது பேர்கிட்ட விசாரிச்சு.. முப்பத்தெட்டு எடத்துல கையெழுத்து போட்டு, புடிச்ச கலர்ல வண்டிய வாங்கி, பூஜை போட்டு 5 லிட்டர் பெட்ரோலும் போட்டு, ஆபிஸ்ல அலப்பறை பண்ண ஆசை ஆசையா வண்டிய எடுத்தா... அய்யய்யய்யோ... ஒரு மனுஷன் டூ வீலர்ல ஆபிஸ் போறதுக்குள்ள என்னா பாடுபடுத்தறாங்க..
வண்டிய கிளப்பி சும்மா ராஜா மாதிரி ('சா' இல்லைங்க..'ஜா' மாதிரி..) ஸ்டைலா ஒரு பத்து அடி கூட போயிருக்க மாட்டோம்.. மொதல் கியர்லேந்து ரெண்டாவது கியர் போடற கேப்புல நம்ம நண்பர் எதிர்க்க தன் பழைய டூ வீலர்ல வருவாரு. அவர் நம்ம வண்டிய பாக்கற பார்வையிலேயே பொறாமைல அவர் வயறு சைலன்ஸர் மாதிரி கொதிச்சு போயிருக்கறது தெரியும்.
"என்ன புதுசா..?"ன்னு வண்டிய பாத்துகிட்டே கேப்பாரு.
ஒரு அலட்சியம் கலந்த பெருமையோட, "ஆமா.. நேத்து தான் எடுத்தேன்.. " (மாசா மாசம் சொளையா ரெண்டாயிரத்து சில்லறை கட்டியாகணுமேனு ஒரு கலவரம் நம்ம கண்ல வந்து போகும்)
நண்பர் : "எவ்ளோ குடுக்கும்னு சொல்றான்..?"
"90 கிலோமீட்டர்னு சொல்றான்.. எப்படியும் 60, 70 குடுக்கும்னு நினைக்கறேன்"
"சான்ஸே இல்லை.. 50 தாண்டாது.. என் வண்டிய கூட மாத்தனும்.. சரி.. வரட்டுமா.."னு சொல்லிட்டு ஹும்ம்ம்-னு ஒரு பெரிய்ய பெருமூச்சு விட்டுகிட்டே போயிடுவார்.
இதுக்குள்ள நம்ம புது வண்டி இஞ்சின் நின்னு போயிருக்கும். காலாலோ கட்டை விரலாலோ அதை கிளப்பி, கியர் மாத்தி ஒரு தெரு திரும்பியிருப்போம்.. எதாவது பல்லு போன பாட்டியோ, செல்லு பேசற பார்ட்டியோ குறுக்கால போயிட்டிருப்பாங்க.. சட்டுனு பிரேக், ஹாரன் ரெண்டையும் அடிச்சு அவங்களை பாத்து முறைச்சுகிட்டே லைட்டா கெட்ட வார்த்தையால திட்டிகிட்டு, அடுத்த கியரை போட்டா வண்டி நகராது. கியர் மாத்தற சத்தம் மட்டும் கட்டக் மட்டக்னு தெளிவா கேக்கும்.. புது வண்டி இல்லையா.. பொசுக்கு பொசுக்குன்னு ஆஃப் ஆகிடும். உதை உதைன்னு உதைச்சாலும் லேசுல கிளம்பாது.
அந்த நேரம் பாத்து தான் லாரி, டெம்போ, கார்னு எல்லாம் நம்ம பின்னாடி வந்து நிக்கும்.. நம்ம நேரம்.. கப்பல் கூட வர வாய்ப்பிருக்கு..
அட, ஒருத்தன் புது வண்டி எடுத்திருக்கானே.. அப்படி இப்படி தானே இருக்கும்.. கொஞ்சம் பொறுமையா இருப்போமேன்னு அறிவு இருக்காது.. தன் மொத்த பலத்தையும் பிரயோகிச்சு, ஹாரனை அழுத்துவாங்க பாருங்க.. அந்த சத்தத்துக்கு செத்த பொணமா இருந்தா கூட மூக்குல இருக்க பஞ்சை எடுத்து காதுல வெச்சு பொத்திக்கும்.
நாம உடனே, கிளட்சை பிடிச்சு வண்டிய ஓரங்கட்டி நிறுத்தி, எல்லா கோவத்தையும் காலுக்கு இறக்கி உதைப்போம் பாருங்க.. கிக்கர் அப்டியே திருப்பி அடிச்சு நம்ம காலை பதம் பாத்துடும்.. மொதலாளியாச்சேனு விசுவாசமே கிடையாது.. பத்தாக்குறைக்கு பேண்ட்டையும் அழுக்காக்கிடும்.. அந்த பக்கமா போற எல்லாரும் நம்மள ஏதோ நீரா ராடியா ரேஞ்சுக்கு லுக் விட்டுட்டு போவாங்க..
ஒருமாதிரி தட்டித்தடவி வண்டிய கிளப்பி மெயின் ரோட்ல மத்த வாகன வெள்ளத்தோட கலந்து அடிச்சுகிட்டு போவோம். சிக்னல் வரும். எல்லாரும் என்னமோ போருக்கு தயாரா இருக்க வீரர்கள் மாதிரி பச்சை சிக்னலுக்கு காத்திருப்பாங்க.. அந்த சனியன் பிடிச்ச பச்சை சிக்னல் லேசுல விழாது.. அப்படியே விழுந்தாலும், அந்த பக்கத்துலேந்து வண்டிங்க வந்துகிட்டே இருக்கும்.. அதை பொளந்துகிட்டு நாம நம்ம ரூட்ல போகணும்.. சிக்னல்ல நாம் ஒருவேளை முன்னாடி இருந்தோம்னா அவ்ளோ தான்.. கொட்டுமேளம் கொட்டற மாதிரி ஹாரன் அடிச்சு நம்ம பின்னாடி இருக்க ரதகஜதுரகபதாதிகள் போருக்கு முரசு கொட்டுவாங்க..
எல்லாரோடையும் சேர்ந்து ஒரு மாதிரி வண்டிய ஓட்டிகிட்டு, மூக்கு பூரா புகையும் காது பூரா சத்தமும், டிரெஸ் பூரா தூசுமா ஆபிஸ் போய் சேர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஏண்டா இந்த வண்டி ஆசை.. பேசாம பஸ்லயோ, ஷேர் ஆட்டோவுலேயோ உக்காந்துகிட்டு, செல்போன்ல பாட்டு கேட்டுகிட்டே வந்திருக்கலாமோன்னு தோணும்.
இருந்தாலும், வண்டி வாங்கும்போது குடுத்த கீ செயினை விரல்லை மாட்டி சுழட்டிகிட்டே ஆபிஸ் உள்ளே போகும்போது மனசுக்குள்ள லேசா ஒரு செடி மொளச்சு அழகா பூ பூத்திருக்கும்.. கூடவே மறுபடியும் வீட்டுக்கு போகும்போது என்ன பாடுபடப்போறோம்னு ஒரு கவலை மாடு மாதிரி எட்டிப் பாக்கும்..
No comments:
Post a Comment